Saturday, March 27, 2010

அஜீத் – கெளதம் மேனன் கூட்டணில் ‘காக்கி’!

அஜீத்தின் 50வது படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் கெளதம் மேனன், “துப்பறியும் ஆனந்த் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது வேறு புராஜக்ட். 1920ம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் ஒரு துப்பறியும் கதைக்காக இந்தத் தலைப்பை பதிவு செய்திருக்கிறேன். கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரிடமும் சொல்லியிருக்கிறேன்.

அஜீத் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. போலீஸ் என்றுதான் முதலில் பெயர் சூட்ட நினைத்தோம். அது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால் காவல் அல்லது காக்கி ஆகிய தலைப்புகளில் ஒன்றை வைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் முடிவு செய்யவில்லை என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் காக்கி என்ற பெயரில் சரத்குமார் ஒரு படம் ஆரம்பித்து கால்வாசி ஷூட் செய்த நிலையில் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தியில் வெளியான ‘அர்த் சத்யா’வை தியாகராஜன் ‘காவல்’ என்ற பெயரில் படமாக்கினார். அதேபோல ‘போலீஸ்’ என்ற தலைப்பில் தன் மகன் பிரசாந்தை வைத்து நான்கைந்து வருடங்களாக இயக்கி வருகிறார் அவர்.

எனவே இந்தத் தலைப்புகள் அத்தனை சுலபத்தில் கெளதம்- அஜீத்துக்கு கிடைக்குமா தெரியவில்லை.

ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக காக்கியை உருவாக்குகிறார்களாம்.

கடந்த முறை அசல் படத்தில் இணை இயக்குநராகவும் பொறுப்பேற்றிருந்தார் அஜீத். இந்தப் படத்திலும் அது தொடருமா… கெளதம் மேனன் அனுமதிப்பாரா? பார்க்கலாம்!

வாலிபன்


விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு, முன்னணி டெக்னீஷியன்களுடன் கைகோர்ப்பதில் குறியாக இருக்கிறார் சிம்பு.

இப்போது, தான் இயக்கும் வாலிபன் படத்துக்கான வேலைகளைத் துவக்கியுள்ள சிம்பு, இதன் ஒளிப்பதிவுப் பொறுப்பை பிசி. ஸ்ரீராமிடம் ஒப்படைக்க விரும்பியுள்ளார். ஆனால் தனக்குப் பிடித்த இயக்குநர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றுவதில் குறியாக இருக்கும் பிசி, சிம்புவுக்கு முதலில் பிடிகொடுக்கவில்லையாம்.

உடனே, பிசி. ஸ்ரீராம் மீதான தனது அபிமானத்தை பல வழிகளிலும் காட்ட முயல, விஷயம் தெரிந்த பிறகு கதை கூட கேட்காமல் வாலிபன் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளார் பிசி. ஸ்ரீராம்.

ஏற்கெனவே விக்ரம் குமாரின் ‘24′ படத்துக்கு கமிட்டாகியிருந்தார் பிசி. அந்தப் படம் டிராப்பாகி விட்டதால் அதே தேதிகளை சிம்புவுக்கு கொடுத்துள்ளாராம்.

வாலிபன் படத்தை எஸ்எஸ் சக்ரவர்த்தி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தன்னை வைத்து காளை என்ற படத்தை எடுத்து நஷ்டப்பட்ட சக்கரவர்த்திக்கு, அந்த நஷ்டத்தை வாலிபன் மூலம் சரி கட்டித்தருவதாகக் கூறியுள்ளாராம் சிம்பு.

இந்தியா டுடே டாப் 50ல் ரஜினி – தமிழக லிஸ்ட்டில் கமல்!

ஆண்டுதோறும் இந்தியா டுடே வெளியிடும் ‘இந்தியாவின் 50 அதிகாரம் மிக்க மனிதர்கள்’ பட்டியலில் ரஜினி இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு அளிகக்கப்பட்ட அதே 28வது இடம் இந்த ஆண்டும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சன் குழும இயக்குனர் கலாநிதி மாறன், ஆஸ்கர்- கிராமி விருதுகள் வென்ற ஏ.ஆர். ரஹ்மான், அப்போல்லோ பிரதாப் ரெட்டி, ஜக்கி வாசுதேவ் ஆகியோர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ள இதர பிரபலங்கள்.

தமிழக அளவில் முதல் 10 முன்னணி பிரமுகர்கள் பட்டியலில் கமல்ஹாஸன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ரஜினியை டாப் 50 பட்டியலில் தேர்வு செய்துள்ளதற்கு இந்தியா டுடே இப்படி விளக்கம் தெரிவித்துள்ளது:

“ஏனெனில், இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் எந்திரன் படத்தில் நடித்து வருகிறார்.

கோலிவுட் பாராட்டு விழா, ஆர்ப்பாட்டங்களில் திரைப்பட நடிகர்கள் பங்கேற்க வற்புறுத்தப்படுவதற்கு எதிராக நடிகர் அஜீத் கொடுத்த எதிர்ப்புக் குரலுக்கு இவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். திரைப்படத் துறையினர் தெரிவித்த எதிர்ப்பு எடுபடவில்லை.

ஏனெனில், ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சிவாஜிக்காக அவர் பெற்ற சம்பளம் ரூ 26 கோடி என்கிறார்கள்..”

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்


பின் வரும் செய்தியைப் படித்துவிட்டு ஏப்ரல் ஃபூல் சமாச்சாரமோ என்று நினைத்து விட வேண்டாம். நிஜமான சினிமா மேட்டர்தான்!.

சினிமா வரலாற்றில் முதல்முறையாக 25 வேடங்களில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு!

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘உலகம்’ என்று பெயரிட்டுள்ளனர். ஆதம் பவா என்பவர் இயக்கும் இந்தப் படம் வடிவேலுவின் திரைவாழ்க்கையின் முக்கிய மைல்கல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக மொத்தம் 175 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமான இதில் 10 கதாநாயகிகள் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்களாம்.

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் உதவியுடன் வடிவேலு விதவிதமான கெட்டப்புகளில் தோன்றவிருக்கிறார் இந்தப் படத்தில். அதில் ஒரு கெட்டப் நித்யானந்தா வேடம் என்றால் இப்போதே சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறதல்லவா (அந்த கெட்டப்புக்கு மட்டும் நிஜ ரஞ்சிதாவையே ஜோடியாக்குவார்களோ!!).

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகுமாம். 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷூட்டிங்காம்.

மேலும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இந்தப் படத்தை இடம் பெறச் செய்யவும் முயற்சிகள் நடக்கிறதாம்.

ஏப்ரல் 14ல் சுறா-சிங்கம் மோதல்!


வரும் ஏப்ரல் 14 சித்திரைத் திருநாளையொட்டி விஜய் நடித்த சுறா மற்றும் சூர்யா நடித்த சிங்கம் படங்கள் வெளியாகின்றன.

விஜய் நடித்த சுறா படத்தை வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் வெளியிடுவதாக முதலில் திட்டமிட்டிருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால் எப்படியாவது இந்தப் படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்று விஜய் விரும்பினாராம்.

அதே சமயம், ஏப்ரல் 14-ம் தேதி சிங்கம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தது சன். இந்தப் படத்தின் உரிமையையும் சன்தான் வாங்கியுள்ளது.

இதுவரை ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ரிலீஸ் பண்ணி வந்தது சன். இந்த முறை சுறா, சிங்கம் இரு படங்களையும் ஏப்ரல் 14-ம் தேதியே வெளியிட்டுவிட தீர்மானித்துள்ளனர்.

இதனால் சுறா – சிங்கம் இரு படங்களுமே ஒரே நாளில் வெளியாக உள்ளன.

இது விஜய் – சூர்யா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. இன்னொரு பக்கம் எந்தப் படத்துக்கு நல்ல தியேட்டர்களைப் பிடிப்பது என்பதிலும் லேசான உரசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.